மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி துவக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு பிரிவால் நிகழாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காதுகேளாதோருக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார். தடகளப் போட்டியில் கால் ஊனமுற்றோருக்கான 50 மீட்டர் ஓட்டம் கைஊனமுற்றோருக்கான 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கான 50 மீட்டர் ஓட்டம், ஊனமுற்றோருக்கான குண்டு எறிதல், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100மீட்டர் சக்கர நாற்காலி ஆகிய போட்டிகளும் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம் நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.