சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
19 பேர் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்
நேரடி நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் 19 பேரை பணி நீக்கம் செய்த நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட சி.ஐ.டி.யு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றிவந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 19 பேர் நடப்பு பருவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை பணிநீக்கம் செய்ததற்கு உரிய காரணத்தை நுகர்பொருள் வாணிபக் கழகம் கூறவில்லை. இதனைக் கண்டித்தும், மீண்டும் அவர்களை அதே பணியில் பணியமர்த்தக் கோரியும், மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை முன்பு, மயிலாடுதுறை மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.