மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த சுகந்தன், கலைமாறன், சந்தோஷ், பிரதிப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களை கருணைக் கொலை செய்துவிடுமாறு பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர். இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால் பிரச்சினை நடந்து 15 நாட்களுக்குப் பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். ஆனால் தங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும், இந்நிலையில் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் தங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லை என்றால் தங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.