மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர், சேனை முதல்வர் சுவாமிகள்
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை காவிரியில் பரிமள ரெங்கநாதர், சேனை முதல்வர் சுவாமிகளுடன் எழுந்தருளினார்.
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் பிரசித்திபெற்ற துலா உற்சவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.
அதனை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் காவிரி துலா கட்டத்திலும், வைணவ ஸ்தலமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமிகள் காவிரி நாலுகால் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சைவ ஆலய சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமளரெங்கநாதர் கோயில் சுவாமி மட்டும் காவிரியில் எழுந்தருளாமல் கோயில் திருக்குளத்திலேயே தீர்த்தவாரி நடைபெற்றது.
கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உத்ஸவத்திற்கு சுவாமி புறப்பாடாகி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி பூஜை பணிகளை மேற்கொண்ட பா.ஜ.க நிர்வாகிகளான மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், நகர தலைவர் மோடி.கண்ணன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
மேலும், சுவாமி புறப்பாடு செய்ய ஏதுவாக தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க.வினரின் வேண்டுகோளை ஏற்று ஐப்பசி 5-ஆம் நாளான இன்று பரிமள ரெங்கநாதர் கோயில் சேனை முதல்வர் சுவாமிகள் வீதியுலாவாக நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளி, காவிரியில் தண்ணீர் ஓடாத காரணத்தால் பள்ளத்தில் நீரைத்தேக்கி ஆரத்தி நடைபெற்றது. பா.ஜ.க.வின் முயற்சியால் பெருமாள் காவிரிக்கரையில் எழுந்தருளியதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.