மயிலாடுதுறை: ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. பிரச்சாரத்திற்கு மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில்; தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பணப்பட்டுவாடாவைத் தடுக்க இதுதொடர்பான புகார்களுக்கு, மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபாண்டியனை 9344450337 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். வாக்குக்கு பணம் தருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஒருபுறம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் சமூக ஆர்வலர்கள் வாக்குக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக பிரச்சார இயக்கம் வாயிலாக களம் இறங்கியுள்ளனர்.
'மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு" மற்றும் "அறம் செய்" ஆகிய சேவை அமைப்பினை சேர்ந்த 3 பேர் கடந்த 3 நாட்களாக வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களைக் கொடுத்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மேட்டுத்தெரு, பிள்ளையார்குட்டை, இந்திரா காலனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர்கள் இன்று டபீர் தெரு பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எந்தவொரு வேட்பாளர் பெயரையும் குறிப்பிடாமல், உங்கள் வார்டுகளில் யார் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நம்ம ஊர் மேம்படும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்களின் இந்த சேவையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.