மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடம் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அரபிக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு செய்தார்.

Update: 2021-05-20 09:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் அருகே அருவாப்பாடி ஊராட்சி எறும்புக்காடு கிராமத்தில் நீடூர் அரபிக்கல்லூரிக்குச் சொந்தமான 22.5 ஏக்கர் இடத்தை மருத்துவக்கல்லூரி அமைக்க அதன் நிர்வாகிகள் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருந்தனர்.

இந்த இடத்தில், மத்திய அரசின் 75 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றை மத்திய நிதியுதவித் திட்டத்தின்கீழ் அமைக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் கல்யாணம் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அரபிக்கல்லூரி பொதுச் செயலாளர் எஸ்கொயர் சாதிக் கூறுகையில்,

நீடூர் அரபிக்கல்லூரிக்குச் சொந்தமாக இடத்தை மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மருத்துவக்கல்லூரி அமைக்க நன்கொடையாக தருவதாக வாக்களித்திருந்தோம். அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு சரியாக உள்ளதாகவும், ஆக்கபூர்வமாக பணிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த இடத்தில் சட்டக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை கொண்டு வரும் திட்டமும் அரசிடம் உள்ளது. அதற்கு தேவையான இடத்தையும் அரசு கோரிக்கை வைத்தால் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து வழங்க ஏற்பாடு செய்வோம் என்றார்.

Tags:    

Similar News