மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.;
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி ஓ.ஹெச்.டி. ஆப்ரேட்டர், தூய்மைப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் சாமியானா பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கதொகை 15,000 ரூபாயை ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் , ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஆபரேட்டர்களுக்கு ஒரே விகிதத்தில் ஊராட்சிகள் முழுவதும் சம்பளம் நிர்ணயம் செய்வதுடன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.