மயிலாடுதுறை அருகே மது பான கடை தகராறில் இருவர் மண்டை உடைப்பு

மயிலாடுதுறை அருகே மது பான கடை தகராறில் இருவர் மண்டை உடைக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-12-20 12:11 GMT

மயிலாடுதுறை அருகே மது பான கடை தகராறு தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட குமாரமங்கலம் காவல் சோதனை சாவடி அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபானக்கடையில் கழனிவாசலை சேர்ந்த ராஜாராமன்(31) மது அருந்தச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும், மாப்படுகையை சேர்ந்த விஜய் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அங்கு வந்த ராஜாராமனின் தம்பி அருண்பாண்டியன் சமாதானம் பேசி விலக்கி விட்டுள்ளார்.

இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே கீழே கிடந்த பாட்டிலால் அருண்பாண்டியன் மற்றும் ராஜாராமனை விஜய் தாக்கியுள்ளார். இதில், அருண்பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவலறிந்து திரண்ட அருண்பாண்டியனின் நண்பர்கள் விஜய்யை துரத்திச் சென்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக விஜய் குமாரமங்கலம் சோதனைச் சாவடியில் தஞ்சமடைந்துள்ளார். ஆனால் விடாமல் அங்கும் துரத்திச்சென்ற அருண்பாண்டியன் தரப்பினர் விஜய்யை வெளியில் விடக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த பெரம்பூர் போலீசார் விஜய்யை காவல்நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்ற போது, போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அருண்பாண்டியன் அவரது அண்ணன் ராஜாராமன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்களை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் பேசி சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதித்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News