ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பற்றி வக்பு வாரிய தலைவர் பேட்டி
ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்கள் மீட்கப்படும் என வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்;
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பல்வேறு துறைகளின் பணிகள் வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் குறுக்கீடு இல்லாமலும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வக்பு வாரியத்துக்குட்பட்ட சொத்துக்களை பாதுகாப்பதிலும், ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பதிலும், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக மக்களிடையே கல்வி மேம்பாடு, தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டை உருவாக்கும் சவால் அரசுக்கு உள்ளது. அவ்வகையில், வக்பு வாரிய நிலங்களை கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும், பல்வேறு பயிற்சி மையங்களாகவும் ஆக்கி மாணவர்களின் எதிர்காலத்தை நல்ல இலக்கை நோக்கி பயணிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். இதற்கு தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என்றார்..