உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ம.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே இந்த இடஒதுக்கீடு ஆறு மாதத்திற்கு மட்டும் செல்லும் என எடப்பாடி அரசு அறிவித்தது பின்னர் தற்போது உள்ள தி.மு.க. ஆட்சியில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்து இருந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இதனை கண்டிக்கும் விதமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்றத்திற்கு எதிராகவும் , அதற்கு முறையான தரவுகளை சமர்ப்பிக்காமல் இருந்த தமிழக அரசை கண்டித்தும் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.