மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிறு, உளுந்து அறுவடை பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் பயிறு அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-01 06:28 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் பயிறு அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

காவிரிகடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ததால் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அதிக அளவில் பாதிப்படைந்த நிலையில் சம்பா அறுவடைக்கு பின்பு உளுந்து, பயிறு அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

ஜனவரி மாத இறுதியில் விதைப்பு செய்யப்பட்ட உளுந்து, பயிறு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. பெண் தொழிலாளர்களை வைத்து உளுந்து, பயிறு செடிகள் அறுவடை செய்யப்ட்டு மகசூல் எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், சம்பள உயர்வால் பல இடங்களில் நெல் அறுவடை போன்றே உளுந்து, பயிறும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டள்ளனர். மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா செங்குடி கிராமத்தில் அறுவடை இயந்திரம் மூலம் பயிறு செடிகள் அறுவடை செய்யும் பணிகள் விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரத்தை சல்லடையை மாற்றி உளுந்து, பயிறு அறுவடை செய்கின்றனர். ஆனால் உளுந்து, பயிறு முழுமையாக வராமல் உடைந்து பருப்பாக கொஞ்சம் வரத்தான் செய்கிறது அதனால் இழப்பு ஏற்பட்டாலும் ஆட்கள் தட்டுப்பாடட்hலும், சம்பளத்தை கணக்கீடு செய்யும் போது பயிறு உடைந்து பருப்பாக வருவதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. உளுந்து, பயிறு உடையாமல் அறுவடை செய்யும் வகையில் நவீன இயந்திரங்களை வேளாண்மைத்துறை மூலம் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News