விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை அருகே விஷவண்டு (கதண்டு) கடித்து பள்ளி ஆசிரியை,மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் , கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வாசலில் உள்ள வேப்பமரத்தில் விஷவண்டு (கதண்டு) கூடுகட்டியுள்ளது. இந்நிலையில், இன்று அப்பள்ளி ஆசிரியை மதுராந்தகி என்பவர் பள்ளியில் இருந்து வெளியில் வந்தபோது, அந்த மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் அவரை கடித்தன. மேலும், அவ்வழியே சென்ற மேலப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி காயத்ரி(34), மகள் கனிஷ்கா(10), மகள் கௌதம் (7) மற்றும் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி(20) என்பவரையும் கதண்டு வண்டுகள் தாக்கின. இதில், காயமடைந்த 5 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் வெளியில் வெளியில் உள்ள வேப்பமரத்திலும், பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு மரத்திலும் கூடுகட்டியுள்ள கதண்டு வண்டு கட்டியுள்ள கூடுகளை, இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்