கோயில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி
கோயில் காவலாளியை தாக்கி கொள்ளை யடிக்க முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோயிலின் இரவுநேர காவலராக செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சாமிநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோயிலிலேயே தங்கியுள்ள இவருக்கு தினந்தோறும் வீட்டிலிருந்து அவரது மகன்கள் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.
இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் போன் செய்துள்ளனர். சாமிநாதன் செல்போனை எடுக்காததால் அச்சமடைந்த அவரது மகன்கள் செந்தில், மணிகண்டன் ஆகியோர் கோயிலுக்கு வந்துள்ளனர். கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சாமிநாதன் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததையும், சுவாமி சன்னதி கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சாமிநாதனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் போலீசார் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதிகாலை சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், காவலாளி சாமிநாதனை தாக்கி விட்டு கோயில் சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை எடுக்க முயற்சித்துள்ளனர். ஹார்ட் டிஸ்க் எது என்று தெரியாததால் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. போலீசார் ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உண்டியலில் இருந்த ரூ37 ஆயிரம் பணம் அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோயிலில் நடந்துள்ள கொள்ளை முயற்சி மயிலாடுதுறை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.