கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை இந்திய மருத்துவ கழகம் முடிவு
கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, இந்திய மருத்துவக் கழகம் மயிலாடுதுறை கிளை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி சராசரியாக 50 முதல் 100 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் தினசரி சுமார் 100 முதல் 200 வரை இவர்களை அரசினர் மருத்துவமனையில் தங்க வைத்து சிசிச்சை அளிப்பதற்கு படுக்கைகள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதையடுத்து, கரோனா தொற்று ஏற்பட்டு, ஓரிரு அறிகுறிகளுடன் அதிக பாதிப்பு இல்லாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களில் ஒருசிலர் தொற்றின் தாக்கம் அதிகரித்து உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டபின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுவதை தவிர்க்க பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை சார்பில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளவர்களை தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் மருத்துவர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து அறிவதோடு,
தினசரி செவிலியர் ஒருவர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டவரின் வீட்டுக்கே சென்று அவரது ஆக்ஸிஜன் லெவல் உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளை செய்து, பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அவர்களை மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதன் மூலம் உயிரை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு நகரில் பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.