கவர்னர் வருகையை காங்கிரஸ், தி.மு.க. எதிர்க்கவில்லை என எம்.எல்.ஏ. பேட்டி
கவர்னர் வருகையை காங்கிரஸ், தி.மு.க. எதிர்க்கவில்லை என எம்.எல்.ஏ. ராஜகுமார் பேட்டி அளித்தார்.;
தமிழக ஆளுநரின் வருகையை காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகுமார் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் இதுகுறித்து அவர் கூறுகையில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் கோயில், தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக கவர்னர் வருகைதரும் நிகழ்ச்சிக்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. கவர்னர் வருகையை யாரும் தடுக்கவில்லை, காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிட்டதாக பா.ஜ.க. தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தமிழக கவர்னர் தேனீர் விருந்துக்கு அழைத்து பல்வேறு கட்சிகள் செல்லவில்லை என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடுகிறது.
அன்றைய தினம் பாரதியார் சிலையை கவர்னர் அலுவலகத்தில் திறந்து வைத்ததாக பத்திரிகை செய்தி வெளிவந்தது. பாரதியார் நூற்றாண்டு விழாவில் பாரதியார் சிலை வைத்ததற்கு தமிழக முதல்வர், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேனீர் விருந்து சுதந்திரதின, குடியரசுதின விழாவில் வழங்குவதுதான் வழக்கம். இது புதிய வகையான சிந்தனையாக இருந்ததால்தான் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் கலந்துகொள்ளவில்லை. எதற்கான தேனீர் விருந்து என்று குறிப்பிடாமல் விட்டது வருத்தம் அளிக்கிறது.
கவர்னர் தமிழகத்தில் எந்த கோயில்களுக்கும், ஆதீனங்களுக்கு செல்வதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். உடன் காங்கரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.