மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர், பெற்றோர் மாேதலால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பானது.

Update: 2021-10-01 14:41 GMT

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலால் மேஜை கீழே தள்ளிவிடப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவரை நேற்று பள்ளியில் சில மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை ஆசிரியர் மகேந்திரன் அடித்ததாக கூறப்படுகிறது. கிண்டல் செய்த மாணவர்களை விட்டுவிட்டு தங்களை ஆசிரியர் அடித்ததாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவரும், பள்ளியின் கல்விகுழுத் தலைவருமான முஹம்மது ஹாலீதுவை அழைத்துச் சென்று பள்ளி தலைமையாசிரியர் கலிவரதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன் மாணவர்களின் பெற்றோர், ஊராட்சிமன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊராட்சிமன்ற தலைவரை அடிக்க முற்பட்டதால், கைகலப்பு ஏற்பட்டது.

இதில் தமிழாசிரியர் மகேந்திரன் தலைமையாசிரியர் அறையில் இருந்த டேபிளை தள்ளிவிட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அறிந்த பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டனர்.

இச்சம்பவம் அறிந்த பெரம்பூர் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News