அரசு உயர்நிலைப்பள்ளியில் பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா எம்.முருகன் ஆய்வு
மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அரங்கக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியை இணைக்கும் விதமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடைபாலம் சாலை வசதி இன்றி மாணவ மாணவியர்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தகவல் அறிந்து வந்த பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன், வகுப்பறை கட்டிடம், நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டு குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது எம்.எல்.ஏ விடம், பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் கூறுகையில், இந்த பள்ளியில் மொத்தம் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்க கூடுதல் வகுப்பறைகளை கட்டி கொடுத்தால் ஏதுவாக இருக்கும். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இதனால் கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர், மழைநீர் தேங்காத வகையில் பள்ளி வளாகத்தை உயர்த்தி சிமெண்ட் கான்கிரீட் மற்றும் நடை பாலத்திற்கு அணுகுசாலை அமைத்து தர வேண்டும் என்றார்.
இதனை கேட்ட எம்.எல்.ஏ, இரண்டு பள்ளிகளுக்கும் இணைக்கும் பாலத்திற்கு புதிய அணுகுசாலை அமைத்து தர ஏற்பாடு செய்வதாகவும், மேலும் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.