மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல்- 3 பேர் கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-28 05:47 GMT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டுகட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை, ஏனங்குடியைச் சேர்ந்த ரமேஷ்(42) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

சவக்கிடங்கில் பணியாற்றும் ரமேஷ் பணி இல்லாத நேரத்தில் கட்டுகட்டும் பிரிவுக்கு வருவதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கட்டுகட்டும் பிரிவுக்கு வந்த ரமேஷை நோய்வாய்ப்பட்டவரைப் போல் இருப்பதாக, கட்டுகட்டும் பிரிவில் பணியாற்றும் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஏனங்குடி ரமேஷை, கரந்தை ரமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ் தனது மகன்கள் தியாகராஜன், தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரச்சொல்லியுள்ளார்.

பணி முடித்து இரவு வீட்டுக்கு கிளம்பிய கரந்தை ரமேஷை, ஏனங்குடி ரமேஷ் தன் மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கரந்தை ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஏனங்குடி ரமேஷ் மற்றும் அவரது மகன்கள் தியாகராஜன்(21), தீனதயாளன்(19), ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News