மணல்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 கட்டிடங்களை இடிக்க கோரிக்கை
மணல்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 கட்டிடங்களை இடிக்க மாணவர்கள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 656 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தில் 3 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டபட்டு பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து இரண்டு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளதாகவும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தில் மாணவர்கள் குடிநீர் அருந்த வேண்டியுள்ளதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு சமையல் கூடம் இடியும் நிலையில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு தளங்கள் உள்ள புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தரமற்ற முறையில் சிமெண்ட் பூச்சுகள் உள்ளதால் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதேபோல் சமையல்கூடம் பழுதடைந்துள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பழுதடைந்து உள்ள கட்டிடங்களை இடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குடிநீர் வசதியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும், எனவும் பெற்றோர்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.