மயிலாடுதுறை அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க திணறும் வனத்துறை

மயிலாடுதுறை அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.;

Update: 2022-01-31 15:44 GMT

முதலையை பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா சித்தமல்லி அருகே சாத்தங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் பிரியும் ராஜன் வாய்க்கால் வழியாக 5அடி நீளம் கொண்ட முதலை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் குளத்தில் புகுந்தது. குளத்தை சுற்றிலும் அருகருகே வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதலையை பிடிக்க ஆடு மற்றும் கோழி இறைச்சி கொண்டு முதலை தூண்டில் அமைத்தும், குளக்கரையைச் சுற்றி 5 இடங்களில் பள்ளம் அமைத்தும் அதில் இறைச்சியை வைத்தும் முதலையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும், முதலை பிடிபடாமல், அவ்வப்போது தண்ணீரிலிருந்து மேலே வந்து குளத்தின் கரையில் இளைப்பாறுகிறது. வனத்துறையினர் அருகில் செல்லும்போது மீண்டும் தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதனால் முதலையை பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் குளத்தின் அருகில் செல்லக்கூடாது என்றும் கால்நடைகளை அவிழ்த்துவிடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு முதலையை அதிநவீன கருவி கொண்டு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News