பச்சைப்பயறு கூடுதல் விலைக்கு கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி
செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூடத்தில் வெளிச்சந்தையை விட கூடுதல் விலைக்கு பச்சைப்பயறு கொள்முதல். விவசாயிகள் மகிழ்ச்சி;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக் கூடத்தில் இருந்து நடப்பு ஆண்டு ராபி பருவத்துக்கு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ், தேசிய வேளாண் முகமை மூலம் வெளிச்சந்தையை விட பச்சைபயிறு கிலோவுக்கு 10 ரூபாய் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், கொள்முதல் அளவை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூடத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிவரை 200 மெட்ரிக் டன் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 45 நாட்கள்கூட நிறைவடையாத நிலையில் 200 மெட்ரிக் டன் பயறு கொள்முதல் செய்யப்பட்டு, இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிச்சந்தையில் பச்சைப்பயறு ரூ.62 முதல் ரூ.64 வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில், வேளாண் விற்பனைக் கூடத்தில் ரூ.71.96க்கு கொள்முதல் செய்யப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் கூடுதலாக 300 மெட்ரிக் டன் பச்சைப்பயறினை வேளாண் விற்பனைக்கூடத்தில் விற்பனைக்காக வைத்துவிட்டு காத்திருக்கின்றனர்.
மேலும், விளைச்சல் அதிக அளவில் உள்ளதால் பல மெட்ரிக் டன் பயறுகளை அறுவடை செய்துவிட்டு, இதுவரை 285 விவசாயிகள் பதிவு செய்துவிட்டு, பச்சைப்பயறு கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.