ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்.
சீர்காழி அருகே 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் ஆகாய தாமரையால் மூடிய அவலம்.
சீர்காழி அருகே ஆகாயத்தாமரை செடியால் ஆக்கிரமிக்கப்பட்ட 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை அகற்றி 15000 ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ளது திருவாலி ஏரி. இந்த ஏரியில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி 5 ஆயிரம் ஏக்கர் நேரடி சாகுபடியும் 10ஆயிரம் ஏக்கர் கிளை வாய்க்கால் மூலமும் சாகுபடி செய்யபட்டு வருகிறது.
திருவாலி, திருநகரி, மங்கைமடம்,கரைமேடு, திருவெண்காடு, புதுத்துறை, நிம்மேலி உள்ளிட்ட 13 ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாகவும் திருவாலி ஏரி உள்ளது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தண்ணீர் தேக்க முடியாமல் உள்ளது. இந்நிலையில் ஏரி முழுவதும் ஆகாய தாமரை செடிகள் சூழ்ந்துள்ளது.ஏரிக்கு தண்ணீர் வரும் ஆறுகள் மட்டுமின்றி பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் 5 க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் ஆகாயதாமரையால் அடைபட்டு புதர்போல் காட்சியளிக்கிறது.மழைக்காலத்தில் வடிகால்கால்கள் மூலம் வெளியேறும் தண்ணீர் முழுவதும் திருவாலி ஏரியில்தான் வந்து சேரும்.
ஆனால் தற்போது அனைத்து வடிகால் ஆறுகளும் ஆகாயதாமரையால் சூழ்ந்துள்ளது. எனவே மழைக்காலம் துவங்கும் முன்பாக திருவாலி ஏரி மற்றும் அதன் பாசன ஆறு, வாய்க்கால்களிலும் ஆகாய தாமரையை அகற்றி மழைநீரை ஏரியில் தேக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஏரியில் முழுமையாக தண்ணீர் சேமிக்கபட்டால் சுற்றியுள்ள 16 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மூன்று போக பாசன வசதி பெறுவதுடன்,13 ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படும் எனவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.