முந்திரி பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
முந்திரி பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு சீர்காழி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல், வடகால்,வேட்டங்குடி,ராதாநல்லூர், திருமுல்லைவாசல், கூழையாறு,தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாசன வசதி இல்லாத இப்பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஒரு சில விவசாயிகள் முந்திரி சாகுபடி செய்து வந்தனர். சுனாமிக்கு பிறகு கடல் பரப்பில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் வரை நிலத்தடி நீரின் தன்மை முற்றிலுமாக மாறியது. இதனால் கடலோரத்தில் ஒட்டியுள்ள கிராமங்களில் சம்பா சாகுபடிக்கு மாற்றாக பெரும்பாலான விவசாயிகள் நீண்ட கால பயிரான முந்திரி சாகுபடிக்கு மாறினர். வறட்சியை தாங்கி உப்பு நீரிலும் நல்ல மகசூல் கிடைக்க தொடங்கியதால் தற்போது ஆயிரம் ஏக்கருக்கு மேல் முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது .கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக முந்திரி விற்பனை பாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் இருந்து அறுவடை செய்யப்படும் முந்திரி கொட்டைகள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டுசல்லப்பட்டு உடைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.கொரோனா தொற்றால் போக்குவரத்து பாதிப்பு வியாபாரிகள் வராதது உள்ளிட்ட காரணங்களால் முந்திரியை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகினர்.
அந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு இந்த ஆண்டு முந்திரி விற்பனையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பூக்கள் கொட்டியும்,கருகியும் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முந்திரி விவசாயிகளுக்கு பகுதிநேர வருவாய் ஈட்டித்தரும் முந்திரி பழ விற்பனை முற்றிலுமாக இல்லாமல் போனதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை முந்திரி அறுவடை தொடங்கும் காலங்களில் உள்ளூர் வியாபாரிகள்,சிறு வியாபாரிகள் முந்திரி பழங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால் பதப்படுத்தப்பட்ட மற்றும் உயர்ரக பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் பொதுமக்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் சத்து மிகுந்த முந்திரிப் பழங்களை வாங்க ஆர்வம் காட்டாததால் முந்திரி பழ விற்பனை முற்றிலும் நின்று போனதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.இதனால் அறுவடை செய்யப்பட்ட முந்திரி பழங்கள் மரங்களுக்கிடையே கொட்டப்பட்டு அழுகி மரங்களுக்கே உரமாகி வருகிறது. இதனால் முந்திரி விற்பனையை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பலன் கிடைக்கும் என்பதால் அரசு நிலையான விலையை ஏற்படுத்த வேண்டும் என முந்திரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அதிகச் சத்துக்களும் குறைந்த விலையும் கொண்ட முந்திரிப் பழங்களை சாப்பிடும் பழக்கத்தை வரும் சந்ததிகளுக்கு பொதுமக்களும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.