சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் குரங்கு கடித்து முதியவர் காயம்

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் குரங்கு கடித்து முதியவர் காயம் அடைந்தார்.

Update: 2022-05-13 12:42 GMT

குரங்கு தாக்கியதில் காயம் அடைந்தவர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் மந்தக்கரை என்ற இடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 2 ஆண் குரங்குகள் அங்குள்ள மரங்களில் தங்கி ஆடு, மாடு,நாய் மற்றும் மனிதர்களை அப்பகுதியில் செல்லும் போது போது விரட்டி பாய்ந்து சென்று கடித்து வருகிறது.இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள்,கிராம பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளி மாணவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை கடித்து குதறியது.அப்போதே குரங்கை பிடிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரன்(65) என்பவர் வீட்டிற்குள் புகுந்த குரங்கு அவரை கடித்து குதறியது.அவரது சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் குரங்கை விரட்டியதுடன் குணசேகரனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க கூண்டுகளுடன் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்தி வரும் இரண்டு ஆண் குரங்குகளையும் பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட வேண்டும் என்று ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News