பலத்த சத்தத்துடன் நிலஅதிர்வு
மயிலாடுதுறை அருகே மறையூர் ஊராட்சியில் பலத்த சத்தத்துடன் நிலஅதிர்வு. பல கிலோமீட்டர் தொலைவுக்கு அதிர்வுடன் சத்தம் எழும்பியதால் பொதுமக்கள் பீதி.;
மயிலாடுதுறை தாலுகா மறையூர் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் சின்னகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் மேலே இன்று காலை 8.30 மணி அளவில் ராணுவ பயிற்சி விமானம் தாழ்வாக பறந்துள்ளது. சிறிது நேரத்தில் குளத்தில் பலத்த சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி உள்ளனர். இந்த சத்தத்துடன் கூடிய அதிர்வு மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் 30 கிலோமீட்டர் வரை எதிரொலித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சேர்ந்த பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். இந்நிலையில் மறையூர் கிராமத்தில் இருந்து சத்தம் வந்ததை அறிந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா நிகழ்விற்கு சென்று சோதனை மேற்கொண்டார். விசாரணையில் பயிற்சி விமானத்தில் ஏர்லாக் கிளியர் செய்வதற்காக நீர்நிலைகளில் காற்றை திறந்து விடும்போது இவ்வாறு அதிர்வுடன் கூடிய சத்தம் வரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று வட்டாட்சியர் பிரான்சுவா தெரிவித்துள்ளார்.