மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு
மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் உடலை தீயணைப்பு துறையினர் 3- வது நாள் மீட்டனர்.
மயிலாடுதுறை தாலுகா நமச்சிவாயபுரம், கல்யாணசோழபுரம் ஐயனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன். திருமங்கலம் அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் இவரது மகள் ரக்ஷிதா(13) கடந்த 10-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அவரது தம்பி சக்திவேல் மற்றும் சில சிறுவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் ஓடும் பழவாற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளிக்கும் போது ஆழத்துக்கு சென்ற தனது தம்பி சக்திவேலை கரைக்கு இழுத்து காப்பாற்றியபோது, நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ரக்ஷிதா ஆற்றில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவலறிந்து மணல்மேடு தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் ஆற்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேடியும் சிறுமி உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று முழுவதும் தீயணைப்பு வீரர்கள் தேடினர்.
இந்நிலையில் இன்று காலை மணல்மேடு மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் 12 பேர் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர். படகில் சென்று தேடினர். அப்போது கல்யாணசோழபுரத்தில் இருந்து சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில் கீரமேடு கிராமத்தில் ஆற்றில் உயிரிழந்த நிலையில் சிறுமி ரக்ஷிதாவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உடல் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்த சம்பவம் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.