சீர்காழியில் நடந்த திராவிட கழக பொதுக்கூட்டத்தில் கி. வீரமணி பேச்சு
சீர்காழியில் நடந்த திராவிட கழக பொதுக்கூட்டத்தில் கி. வீரமணி பேசினார்.;
சீர்காழி பழைய பேருந்துநிலையம் அருகே திராவிட கழகம் சார்பில் நீட்தேர்வு ,புதிய கல்வி கொள்கை எதிப்பு,மாநில உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் பெரியார்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், த.மு.மு.க. மாநில செயலாளர் முசாகுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தி.க.மாவட்ட செயலாளர் தளபதிராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசுகையில், நீட்தேர்வு எதிர்ப்பு, புதியகல்வி கொள்கை எதிரப்பு, மாநில உரிமை மீட்பு குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தெளிவு ஏற்படுத்திட இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. அன்றாடம் போராட்டகளத்தில் நிற்க வேண்டிய ஏராளமான தேவைகளை தற்போதைய ஒன்றிய அரசு உருவாக்கிதருகிறது. தமிழகத்தில் இந்திக்கு ஆதிக்கமா என்று கேட்டநேரத்தில் 1938லிருந்து மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்து போராடி,ஒன்றரை ஆண்டு காலம் தண்டிக்கப்பட்டு தமிழ் வாழ்க,இந்தி ஒழிக என குரல் கொடுத்தார் தந்தைபெரியார். பதவிக்கு போனால் சில தலைவருக்கு அதிகார மோகம் இருக்கும், அதனால் அவர்களுக்கு அதிகார எல்லை தெரியாது.அதுபோன்ற நிலையில்தான் ஒன்றிய அரசு உள்ளது.
திராவிட இயக்கம், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து போராடிய நேரத்தில் எதிலும் தோற்றதாக வரலாறு இல்லை. வெற்றிகனி பறிக்க காலதாமதம் ஆகலாம். அனைத்து கட்சியினரும் அர்ச்சகராகவேண்டும் என தந்தைபெரியார் தனது 95வது வயதில் களத்தில் இறங்கி போராடினார். அனைவரும் அர்ச்சகராகலாம் என கருணாநிதி இருமுறை சட்டம் இயற்றினார்.
கருணாநிதிவழியில் இந்தியாவிற்கு வழிகாட்ட சமூகநீதிக்கான நாயகராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். அனைவரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றப்பட்டது. அர்ச்சகர்களாக கோயிலுக்கு உள்ளே போனவர்கள் பணியாற்றுகிறார்கள். எந்த கடவுளும் கோவித்துகொண்டு வெளியே செல்லவில்லை.தி.மு.க. ஆட்சியல் கோயிலுக்குஆபத்து,கடவுளுக்கு ஆபத்து என சிலர் கூறினர். தற்போதுதான் விசா வாங்காமல் வெளியே சென்ற கடவுள்கள் அதிகமாக மீண்டும் உள்ளே வருகிறார்கள்.அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி சிலைகளை மீட்டு கொண்டுவந்துள்ளார்.
ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என அமித்ஷா வரலாறு தெரியாமல் பேசுகிறார். தமிழகம் சமூகநீதிமண். இந்த வரலாறு மிகப்பெரியது. இங்கு இந்தியை திணிக்கவேண்டும் என ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆச்சாரியார். இரண்டு முறை முதல்வராக இருந்த ஆச்சாரியார் அவரே இந்தியை எதிர்த்த நேரத்தில் எப்பொழுதும் ஆங்கிலம் தான் என்றும் இந்தி கிடையாது என கூறினார். இந்த வரலாற்றை நினைவூட்டவேண்டும். பெட்ரோல் டீசல்,விலையுர்வு,மீனவர்கள் பிரச்சனை,வேலையில்லாதிண்டாட்டம் என பலபிரச்சனைகள் நிலவுகிறது. நீட்தேர்வு,புதிய கல்வி கொள்கை புற்றுநோயாக உள்ளே நுழைந்துள்ளது. மாநில உரிமை ஆட்சியை போட்டி அரசியல் நடத்தி ஆட்சி சக்கரத்தை சுழலவிடாமல் ஆளுனரை குறுக்கே வைத்து கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்க செய்யாத சூழல் இருக்கம்போது அதற்கு குரல் கொடுக்கவேண்டிய நிலை உள்ளதால் இந்த திராவிட கழகம் இந்த மீட்பு பயண போராட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றார்.
இதில் தி.மு.க. நகர செயலாலர் சுப்பராயன்,ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.