மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின் விசிறி இருப்பது எங்கே என தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின் விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் மின்னழுத்தம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மின் அழுத்தம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும் பல பொதுத் தேர்வு மையங்களில் நேற்றைய தினம் தடை ஏற்பட்டு மாணவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கார் நிறுத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின்விசிறி போடப்பட்டு, தொடர்ந்து ஓடிக்கொண்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் இதனை கண்டு ஆதங்கம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை, மின்பற்றாக்குறை என காரணம் கூறி பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும் என கூறும் அரசு இதுபோன்று மின்சாரத்தை வீணடிக்கும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பினர்.