குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா -ரூ. 17,500 பறிமுதல்
குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ. 17,500 பறிமுதல் செய்யப்பட்டது.;
வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பணம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் குத்தாலம் பேரூராட்சி உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பார்வையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படை அதிகாரி சிவபழனி மற்றும் குத்தாலம் தலைமை காவலர்கள் செல்வேந்திரன், விக்ரம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் 35 வெள்ளைநிற கவர்களில் தலா ரூபாய் 500 வீதம் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.மேலும் அந்த கவர்களுடன் 7-வது வார்டு வாக்காளர் பட்டியலும் கிடந்தது.
இதன் அடிப்படையில் தூக்கி வீசப்பட்ட பணம் ரூபாய் 17,500 பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.