தருமபுரம் ஆதீனம் 11 லட்சம் : முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கல்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 11 லட்சம் வழஙகினார்.;
தருமபுரம் ஆதீனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ.11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார்.
இதற்கான காசோலையில் ஆதீனத் திருமடத்தில் கையெழுத்திட்டு வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு காட்டும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி திருபுவனம், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஆதீனக் கோயில்கள் சார்பில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தினசரி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் தருமபுரம் ஆதீனம் சார்பில் கிராமங்களில் 2000 பேருக்கு தினசரி கபசுரக் குடிநீர் வழங்கப்படும். நோய் நீங்குவதற்காக ஆதீன திருமடத்தில் 'அவ்வினைக்கு இவ்வினை" என்கிற திருநீலகண்ட திருப்பதிகம், 'மந்திரமாவது நீறு" தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இவற்றை பாடிப் பிரார்த்தனை செய்து தொற்று நீங்க இறைவனை பிரார்த்திப்போம் என்றார்.