மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, இன்று மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் அமைந்துள்ள 77 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
மயிலாடுதுறை நகராட்சியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் நகராட்சி தேர்தல் அலுவலரும், ஆணையருமான பாலு மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி மேற்பார்வையிட்டார். இதுபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.