நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-27 16:52 GMT

மயிலாடுதுறை அருகே நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து மயிலக்கோயில், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம்,நல்லூர்,கோதண்ட புரம்,பில்படுகை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக அளக்குடி கிராமத்துக்கு கடந்த ஒரு வருட காலமாக மினி பஸ் ஒரு நாளைக்கு 14 முறை வீதம் வந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்த மார்க்கத்தில் சென்று வந்து கொண்டிருந்த மினி பஸ் சாலை வரி கட்டாததால்,சாலை போக்குவரத்து அதிகாரியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மினிபஸ் இயக்குவதற்கு தடை விதித்தார்.இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கிராம பகுதிகளுக்கு பஸ் சென்று வராததால் தினந்தோறும் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிக்கு வந்து செல்லும் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் அளக்குடி,நாணல்படுகை, கோதண்டபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கொள்ளிடத்திற்கு வந்து கொள்ளிடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நின்று பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில் கிராமத்தின் உள்புற பகுதிக்குஒரே ஒரு மினி பஸ் வந்து சென்று கொண்டிருந்தது.இதனால் கிராம மக்கள் சிரமமின்றி கொள்ளிடம் பகுதிக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கி சென்று கொண்டிருந்தனர். ஆனால் கடந்த15 நாட்களுக்கும் மேல் பஸ் போக்குவரத்து நின்றுவிட்டதால் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட மினி பஸ்சை உடனடியாக இயக்கவும்,புதியதாக அரசு டவுன் பஸ்சை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News