ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?
மயிலாடுதுறை, பெரம்பூரில் இடியும் நிலையில் உள்ள 20 தொகுப்பு வீடுகளை, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ஊராட்சி, தோப்புத்தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், அப்பகுதி மக்களுக்கு 24 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவற்றில் 20க்கும் மேற்பட்ட வீடுகள், கடந்த 5 ஆண்டுகளாகவே பழுதடைந்து காணப்பட்டன. இதனால் மழைக்காலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தற்போது பெய்து வரும் கனமழையால், கட்டடத்தின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. கான்கிரீட் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிவதுடன், அதிக அளவில் மழை நீர் உட்புகுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வீடுகளில், சிறு குழந்தைகளுடன் வசிப்பவர்கள், எப்போது இடிந்துவிழுமோ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளும் உறங்கச் வேண்டியுள்ளதாக, வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர், ஒரு வீட்டின் மேற்காரை பெயர்ந்து விழுந்ததில், ஒரு குழந்தைக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பருவமழை மேலும் தீவிரமடைவதற்குள் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் எனவும், அதுவரை தாங்கள் குடியிருக்க மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும், குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.