மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சம்பா பயிருக்கு காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கான சம்பா பயிர் இன்சூரன்ஸ் தொகை கடந்த 10 தினங்களுக்கு முன்பு வழங்கும் பணி துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 287 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர் இன்சூரன்ஸ் 49 கிராமங்களுக்கு வெறும் 0% சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்கவில்லை. மேலும் 13 கிராமங்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு தொகை கணக்கீடு செய்ததில் வழக்கமான நடைமுறைகளை விடுத்து தனியார் காப்பீட்டு நிறுவனமான இப்ஃகோ டோகியோ நிறுவனம் வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றின் தகவல்களுடன் ஆய்வு செய்து வழங்கியுள்ளதாகவும் இதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கணக்கீட்டை மறு ஆய்வு நடத்தக் கோரியும் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் நாற்றுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதற்கான கணக்கிட்டு நடத்த வேண்டும், 2020-21ம் ஆணடுக்கான சம்பா பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகையை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஸ்டேட் பேங்கில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் தங்களிடம் நேரில் வந்து மனுவை பெற வேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலக சாலையில் டிரென்ட் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.