மயிலாடுதுறை: கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட 2 பேருக்கு வெட்டு
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட 2 பேருக்கு வெட்டு விழுந்தது.
மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் கடலாழி ஆற்றங்கரை ஓரத்தில் மகாலிங்கம்(72) என்பவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகிறார். மேலும், இவருடன் இவரது தம்பி பொடிசன் என்கிற நாகராஜ், மகன் ஜெயகாந்த், உறவினர்கள் கார்த்தி, முனுசாமி என ஒட்டுமொத்த குடும்பமே சாராய வியாபாரம் செய்து வருகின்றனர். சமீப காலமாக அப்பகுதியில் கள்ளச்சாராயத்தால் அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 40க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மகாலிங்கம் வீட்டுக்குச் சென்று சாராய விற்பனையை நிறுத்தச் சொல்லி கேட்டுள்ளனர். இதில் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகியுள்ளது. அப்போது, ஜெயகாந்த் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோடங்குடி வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான பார்த்திபன்(18) (பார்த்திபன் பா.ஜ.க.வில் கிளை செயலாளராக உள்ளார்) என்பவரை தலை, கை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ஜெயகாந்திற்கு வலதுகையில் நான்கு விரல்கள் வெட்டுப்பட்டு தொங்கின. மேலும், மணிகண்டன்(40) என்பவருக்கும் கை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட இருவரும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேநேரத்தில் கிராமமக்கள் சென்று தாக்கியதில் காயமடைந்த கள்ளச்சாராய வியாபாரி மகாலிங்கமும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்டவர்கள் வெட்டுப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.