வைத்தீஸ்வரன்கோவில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
வைத்தீஸ்வரன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது, அதன்படி சீர்காழி வட்டத்தில் கோபால சமுத்திரம் கிராமத்தில் சமுதாயக்கூடம், சீர்காழி நகரில் உள்ள T.S.M துவக்கப்பள்ளி, வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து, வகைப்படுத்தி சரியான சிகிச்சை மையத்திற்கு அவர்களை அனுப்பி வைக்கும் பொருட்டு, இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரதாப் குமார், வைதீஸ்வரன் கோவில் தலைமை மருத்துவர் காசி விஸ்வநாதன், வைத்தீஸ்வரன் கோவில் கொரோனா வார்டு சிறப்பு மருத்துவர் ராஜ்பாபு, திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.