மயிலாடுதுறையில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் லலிதா துவக்கினார்
மயிலாடுதுறையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்.;
இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 543 இடங்கள், நகர்புறங்களில் 39 இடங்கள் என்று மொத்தம் 582 மையங்களில் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புறங்களில் 7,695 குழந்தைகள் கிராமப்புறங்களில் 68,269 குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 41 குழந்தைகள் என்று 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டிப்பாக போலியோ சொட்டு மருந்து செலுத்திகொள்ள வேண்டும் என்றும் இன்று விடுபட்டவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் சிறப்பு முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும், போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்காக 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட தங்களின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை செலுத்தி போலியோ நோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதேபோல், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில்; நடைபெற்ற முகாமில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.