தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 28 மாத சம்பளம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் உள்ளனர்.
மயிலாடுதுறை தாலுகா தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அரவை பருவம் நிறுத்தப்பட்டது. ஆலையில் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது ஆலையில் மராமத்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஓய்வுபெற்று சென்றுள்ளவர்கள் என 125 நபர்களுக்கு 2019லிருந்து 28 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆலையினுள் 15வது நாளாக ஆலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து துவங்கிய காத்திருப்புப் போராட்டத்தில் 28 மாதம் நிலுவையிலுள்ள ஊழியர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், மூடப்பட்டுள்ள ஆலையை தமிழக அரசு மீண்டும் திறக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் அனைத்து பண பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினாலும் சம்பளம் பெற்றுத்தர எந்த உத்தரவாதமும் வழங்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. சம்பளம் கிடைக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என கூறி அங்கேயே உணவு சமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.