மயிலாடுதுறை காவிரி துலாக் கட்ட உற்சவத்தில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்ட உற்சவத்தில் இறைவன் முடவனுக்கு காட்சி அளித்த முடவன் முழுக்கு தீர்த்தவாரி இன்று நடந்தது.

Update: 2021-11-17 13:31 GMT

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட உற்சவத்தில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம். அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல்ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை.

அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார். அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

Tags:    

Similar News