மயிலாடுதுறை அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறப்பு
மயிலாடுதுறை அருகே உடல்நலக்குறைவால் அண்ணன் உயிரிழந்ததால், அதிர்ச்சியடைந்த தம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி வக்காரமாரி கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமணி(71). இவர் சீர்காழி மின்வாரியத்தில் பணியாற்றி பணிஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் குணசேகரன்(64) தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று வீரமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணல்மேடு அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல குணசேகரன் காரில் ஏற்றி உள்ளார். ஆனால் காரிலேயே வீரமணி உயிரிழந்தார்.
அண்ணன் இறந்ததை கண் முன்னே கண்ட தம்பி குணசேகரனும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இருவரது உடலும் ஒரே சுடுகாட்டில் அருகருகே புதைக்கப்பட உள்ளது. ஒரே குடும்பத்தில் ராமர், லட்சுமணன் போல் வாழ்ந்த அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.