மயிலாடுதுறை அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
மயிலாடுதுறை அருகே நாட்டாண்மை பிரச்னையில் தம்பியை கொலை செய்த அண்ணன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகம் சிவனாரகரம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் செந்தில்குமார்(50). விவசாயியான இவர் ஒருவருடத்துக்கும் மேலாக அப்பகுதியில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தல் நடுத்தெருவில் வசிக்கும் இவரது சொந்த அண்ணன் பாண்டியன்(55) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்தது. அந்த இடம் பாண்டியனின் புழக்கத்தில் இருந்ததால் அங்கு கோயில் கட்டுவதற்கு பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நடுத்தெருவிற்கு வந்த செந்தில்குமாரை பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார்(26) ஆகியோர் கத்தியால் கழுத்து, இடது விலா மற்றும் வலது கையில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரைது உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பாலையூர் போலீசார், பாண்டியன் மற்றும் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். கிராம நாட்டாண்மை பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக சொந்த தம்பியையே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.