மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி யானைக்கு அபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி யானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பாள் என்ற 50 வயதுடைய யானை கடந்த 49 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை மற்றும் கோயில் பசு, காளை மாடுகளுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக யானை அபயாம்பாள் தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், யானைக்கு மட்டும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு, யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படாத நிலையில்;, கோயில் பிரகாரத்தில் யானை, பசு மற்றும் காளை மாடுகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் யானை, பசு மற்றும் காளைக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர் மற்றும் பஞ்ச திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர்.
பின்னர் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு யானை, மாடுகள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தது. கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.