சீர்காழி அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா சிவராத்திரி உற்சவம்
சீர்காழி அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைதீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த 26 ம் தேதி காவிரி குளக்கரையில் காப்புக் கட்டுதலுடன் துவங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை இன்று இரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று பால்காவடி, பால்குடம் ,அலகு காவடிகள் வீதி உலா மேல தாளங்கள் முழங்க நடைபெற்றது.
இளைஞர்களின் கோலாட்டம் ,பார்வதி சிவன் ஆட்டத்துடன் வைத்தீஸ்வரன்கோவில் நான்கு விதிகளையும் வலம்வந்து கோவிலை வந்தடைந்தது , அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், ஆண்கள் அலகு காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.