திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முன்னாள் வி.எச்.பி.தலைவர் தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முன்னாள் வி.எச்.பி.தலைவர் வேத தரிசனம்;
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் இங்கு மட்டுமே ஆயுஷ்ஹோமம் ,சதாபிஷேகம், மணிவிழா, யாக பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் இக்கோவிலில் வி.எச்.பி. முன்னாள் தலைவர் வேதாந்தம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் நமக்கு அச்சுறுத்தல் எந்த நேரமும் நமக்கு உள்ளது. நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்ததை கோயம்புத்தூரில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் கொண்டாடியுள்ளனர். அது வருத்தம் அளிக்கிறது .
முப்படை தளபதி உயிரிழப்புக்கு தமிழக முதல்வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது நமக்குப் பெருமையான ஒரு செயல். இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரே அவரது இறப்பை கொண்டாடியுள்ளது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும். தமிழக முதல்வரும் தி.மு.க கோட்பாடுகளை கொண்டவராக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான முதல்வராக செயல்படவண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கக்கூடிய தலைவராக முதல்வர் செயல்பட வேண்டும் .
பள்ளிகளில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது இறைவணக்கம் செலுத்துவது போன்றவற்றை தற்போது நிறுத்தி உள்ளதாக தெரியவருகிறது. மனிதனை மனிதனாக வளர்வதற்காகத்தான் தமிழ் தாய் வாழ்த்து இறைவாழ்த்து உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் மழை காலங்களில் தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். இது பாராட்டுக்கு உரியது.
தமிழகத்தில் சமீபகாலமாக மகன் தந்தையை கொல்வது தந்தை மகனை கொல்வது போன்ற செய்திகள் நிறைய வருகிறது. இது போன்ற நிலைகளில் ஏற்படுவதை தடுப்பதற்கு மாணவர்கள் நல்லொழுக்கமாக உருவாக்கப்பட வேண்டும். முதல்வரின் தேர்தல் அறிக்கையில் பூசாரிகளுக்கு மாதம் 2000 ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதாது கூடுதலாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலரது தூண்டுதலினாலும் இடைதரகர்களாலும் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்துக்கள் வகுப்பு வாதத்தை ஒருபோதும் விரும்பாதவர்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு .இங்கு அனைவரும் பாகுபாடில்லாமல் சமமாகவே வாழ்ந்து வருகிறோம். எனவே இந்தியாவின் பாதுகாப்பு, கலாச்சாரம், இந்துக்களின் உரிமையையும் பாதுகாக்க மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.