பழுதடைந்த கட்டிடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: மத்திய மண்டல ஐஜி

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் காவலர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற ஐஜி;

Update: 2021-12-25 12:00 GMT

கொரோனா தொற்றால் உயிரிழந்த வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அருள்குமார் மனைவி சியாமளா மற்றும் மகள் ராகவியிடம் ஐஜி பால கிருஷ்ணன் ஒப்படைத்தார்.

மத்திய மண்டலத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் காவலர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை பெற்ற பின்னர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேலும் அவர் கூறியதாவது:

 பொதுமக்கள் காவலர்கள் தங்கள் குறைகளை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக இந்த குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.. பொதுமக்கள் 60 மனுக்களும் காவலர்கள் எட்டு மனுக்களும் அளித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அருள்குமார் மனைவி சியாமளா மற்றும் மகள் ராகவியிடம்  ஒப்படைக்கப்பட்டது. . இந்த மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு ஏற்படுத்தி தரப்படும். சொத்து பிரச்னை தொடர்பான மனுக்கள் மீது காவல்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருசில மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில், அந்த மனுதாரருக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் காவலர்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மத்திய மண்டலத்தில் பழுதடைந்து இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ள கட்டிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News