மயிலாடுதுறை: 5 ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் பணி புறக்கணித்து போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் விடுப்பு எடுத்து பணி புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-12 08:19 GMT

உள்ளாட்சி பணியாளர்களின் போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும், மேலும் வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக நிதியினை காலதாமதமின்றி வட்டாரங்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News