144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவிப்பு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;
மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டு, இரண்டு சமூகத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டு கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, இந்த ஆண்டு பிரச்சினை தொடராமல் இருக்க அப்பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டு 144(3) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவின்போது அம்பேத்கர் பிறந்தநாள்விழாவை கொண்டாடக்கூடாது என்ற உத்தரவு எதுவும் இல்லை. எனவே, அப்பகுதியில் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மாலை அணிவிக்க மாவட்ட நிர்வாகம் இன்று மாலைக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இருவர் இருவராக சென்று அம்பேத்கர் படம்' வைத்து மரியாதை செலுத்துவோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.