குத்தாலம் அருகே வாய்க்காலில் மர்மமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி
மயிலாடுதுறை மாவட்டம்குத்தாலம் அருகே 13 வயது சிறுமி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள்.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குதெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா(13). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஷோபனா நேற்று இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சிறுமியை தேடி வந்த உறவினர்கள் மாமா பாலசுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்ததால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள குத்தாலம் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.