வாக்கு கேட்டு சென்ற பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் எம்எல்ஏவை கிராம பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் எம்எல்ஏ வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில் கிடாரங்கொண்டான், கீழையூர், பொன்செய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பொன்செய் கிராமத்தில் கன்னி தோப்பு தெருவில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜை முற்றுகையிட்டு அதிமுக அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இல்லை என்றும் விலையில்லா ஆடுகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். தமிழக அரசின் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் பெண்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து சரி செய்து தருவதாகவும் கூறி பெண்களிடம் வேட்பாளர் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள், வேட்பாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பகுதியில் பரபரபு ஏற்பட்டது.