பள்ளிகள் மூடப்பட்டதால் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் சேதாரமாம்.
குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள்.;
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்த மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையிழந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தவது தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கொரோனா தொற்றால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழக அரசு, அனைத்து பள்ளிகளையும் மூடியது. இதனால் 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களை 50 சதவிகிதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று கூறி பாதிசம்பளம் கொடுத்தனர்.
இதனால் ஆசிரியர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். 10, 12ம் வகுப்பில் 98 சதவிகிதம் தேர்ச்சியளித்த ஆசிரியர்களின் வாழ்க்கை மிக மோசமாக மாறியுள்ளது. கடந்த அதிமுக அரசு தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை பற்றி கவலைப்படவில்லை.
கொரோனா 2வது அலையால் இந்த ஆண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் வேலை இழந்து குடும்பம் நடத்துவதற்கு கூட பணம் இல்லாமல் உள்ளது. கடலூரில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டுவாடகை கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஒரு வருடமாக சரியாக சம்பளம் இல்லாததால் வருமையில் வாடுவதால் பாதிசம்பளமாவது வழங்க வேண்டும் அல்லது அரசு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு ஆசிரியர் பணிக்குரிய வயது வரும்பு 57 என்று இருந்ததை அதிமுக அரசு 40 வயதாக குறைத்ததை ரத்து செய்து வயது வரம்பை 57ஆக மீண்டும் உயர்த்த வேண்டும், ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெற்று ஒருலட்சம் பேர் தனியார் பள்ளிகளில் வேலைபார்த்து வருகின்றனர்.
அவர்களை காலியாக உள்ள அரசு பள்ளிகளில் பணிஅமர்த்த வேண்டும் என்றார். அதிமுக ஆட்சியில் அரசு பணியாளர் தேர்விலும் டெட் தேர்விலும் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். தங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்புவதாகவும் தமிழக அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறினார்.